வேலைவாய்ப்பு முகாம் திடீரென தள்ளி வைப்பு இளைஞர்கள் பெண்கள் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு


வேலைவாய்ப்பு முகாம் திடீரென தள்ளி வைப்பு  இளைஞர்கள் பெண்கள் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில்  பரபரப்பு
x
தினத்தந்தி 19 Dec 2021 9:22 PM IST (Updated: 19 Dec 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் திடீரென தள்ளி வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


கள்ளக்குறிச்சி

வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தில் 19-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்றும் இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உள்ள ஆட்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டடு இருந்தது.
இதை அடுத்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு, வேளாண்மை, ஆசிரியர் படிப்பு, நர்சு, பார்மஸி, ஓட்டல் மேனேஜ்மெண்ட் ஆகிய படிப்பு படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் கள்ளக்குறிச்சியில் குறிப்பிட்ட தனியார் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். 

சாலை மறியல்

ஆனால் பள்ளி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தெரியவில்லை. பின்னர் விசாரித்தபோது வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவில்லை என்பதும், தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதனால் பல்வேறு கனவுகளுடன் பணம் செலவு செய்து சான்றிதழ்களுடன் வெகுதூரம் பஸ்சில் பயணம் செய்து வந்த இளைஞர்கள், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  வேலைவாய்ப்பு முகாம் தள்ளி வைக்கப்பட்டது குறித்த தகவலை முன்கூட்டியே தெரிவிக்காததால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் கள்ளக்குறிச்சி-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வெகு தொலைவில் இருந்து பணம் செலவுசெய்து வந்த தங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் தேதி தள்ளி வைக்கப்பட்டது பற்றிய தகவலை முறையாக ஏன் தெரியப்படுத்தவில்லை? இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
ஆனால் போலீசார் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இளைஞர்களில் ஒரு பகுதியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்னொரு பிரிவினர் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி வளாகத்திலேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் கலைந்து போக செய்தனர்.  இளைஞர்களின் சாலை மறியல் போராட்டத்தால் கள்ளக்குறிச்சி-சென்னை சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story