கரூர் மாவட்டத்திற்கு விரைவில் ஐ.டி. பார்க்; அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 19 Dec 2021 11:45 PM IST (Updated: 19 Dec 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்திற்கு விரைவில் ஐ.டி. பார்க் முதல்-அமைச்சர் உருவாக்கி தருவார் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர்
வேலைவாய்ப்பு முகாம்
கரூரில் நேற்று காலை 120 நிறுவனங்கள் மூலம் 5 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது:- தமிழக முதல்-அமைச்சர் கரூர் மாவட்டத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தார். அதேபோல் பள்ளப்பட்டி பேரூராட்சியை நகராட்சியாகவும், புஞ்சை புகளூர் மற்றும் காகிதபுரம் பேரூராட்சிகளை உள்ளடக்கி புகளூர் நகராட்சியாக அறிவித்தார். 
ஐ.டி. பார்க்
அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் உள்ளிட்ட பல்வேறு நீர் மேலாண்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒரே ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதியை கரூருக்கு ஒதுக்கித் தந்து இருக்கிறார். 
விரைவில் கரூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் ஐ.டி. பார்க் ஒன்றை உருவாக்கி தருவார்கள். அதன்மூலம் நமது மாவட்டத்தில் படித்தவர்கள் இங்கேயே ஐடி துறையில் பணி புரியலாம். 
சிப்காட் தொழிற்சாலை 
கரூர் மாவட்டத்தில் தொழில்துறையினர் குறிப்பாக ஜவுளித் துறையில் ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்துவதற்கான முயற்சி நடைபெற்று கொண்டுள்ளது. 
200 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு இந்த ஆண்டு நமக்கு முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். அதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாற்றுத்திறனாளிகள் 13 பேர் உள்பட மொத்தம் 1,094 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story