மராட்டியத்தில் 5 வயது சிறுவன் உள்பட மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 Dec 2021 11:48 PM IST (Updated: 19 Dec 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 5 வயது சிறுவன் உள்பட மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை, 
மராட்டியத்தில் 5 வயது சிறுவன் உள்பட மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் 
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதிக வீரியத்துடன் பரவும் தன்மை கொண்ட இந்த ஒமைக்ரான் தொற்று வேகமாக பல நாடுகளில் பரவி தனது எல்லையை விரிவு படுத்தி வருகிறது. 
இதை இந்தியாவுக்குள் நுழையாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் இது எந்த பலனும் அளிக்கவில்லை. கட்டுப்பாடுகளை தாண்டி இந்தியாவில் நுழைந்த ஒமைக்ரான் மராட்டியத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. இதில் 4 பேர் மும்பை விமான நிலையத்தில் தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஆவர். இதில் 2 பேர் கர்நாடகாவையும், ஒருவர் அவுரங்காபாத்தையும் சேர்ந்தவர். ஒருவர் மட்டும் மும்பையில் வசித்து வருகிறார். தொற்று கண்டறியப்பட்டவர்களில் 2 பேர் தான்சானியாவில் இருந்தும், 2 பேர் இங்கிலாந்தில் இருந்தும் வந்து உள்ளனர். 4 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது அவர்கள் அந்தேசி செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
5 வயது சிறுவனுக்கு பாதிப்பு
இதேபோல நோய் பாதித்த மற்ற 2 பேரும் புனே பிம்பிரி சிஞ்வட், புனே புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதில் புனே புறநகரை சேர்ந்த 5 வயது சிறுவன் ஏற்கனவே ஒமைக்ரான் பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன்.
இதுவரை மாநிலத்தில் 54 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக மும்பையில் 22 பேரும், புனே பிம்பிரி சிஞ்சவட்டில் 11 பேரும், புனே புறநகரில் 7 பேரும், புனே மாநகரப்பகுதியில் 3 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதுதவிர சத்தாராவில் 3 பேரும், கல்யாண் டோம்பிவிலியில் 2 பேரும், உஸ்மனாபாத்தில் 2 பேரும், புல்தானா, நாக்பூர், லாத்தூர், வசாய் விராரில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரானா பாதிப்பு
இதேபோல நேற்று மாநிலத்தில் புதிதாக 767 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 9 பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை 66 லட்சத்து 49 ஆயிரத்து 596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 41 ஆயிரத்து 349 பேர் உயிரிழந்து உள்ளனர். 
தலைநகர் மும்பையில் புதிதாக 336 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள்.

Next Story