கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 19 Dec 2021 11:56 PM IST (Updated: 19 Dec 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

ஆருத்ரா தரிசனத்தையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கரூர்
திருக்கல்யாண உற்சவம்
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று காலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடன் மணக்கோலத்தில் பசுபதீஸ்வரர் எழுந்தருளினார். இதில் விநாயகர் பூஜை, மாங்கல்ய பூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பசுபதீஸ்வரருக்கு மகாதீபாராதனை கட்டப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம்
இதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும், ஆராதனையும் நடக்கிறது. தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மட்டையடி உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவெம்பாவை உற்சவம்
குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி திருெவம்பாவை உற்சவம் கடந்த 11- ந் தேதி தொடங்கியது. இதையொட்டி மாணிக்கவாசகருக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜர் முன்பு மாணிக்கவாசகர் இயற்றி பாடிய 21 திருவெம்பாவை பாடல்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலில் பாடப்பட்டது. அதுபோல் கோவிலிலிருந்து காலை, மாலை நேரங்களில் மாணிக்கவாசகரின் வீதிஉலா நடைபெற்றது. 
கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வீதி உலா நடந்தபோதும் திருவெம்பாவை பாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் மாணிக்கவாசகரை வணங்கி சென்றனர். பின்னர் நேற்று இரவு சாமியின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பிச்சாண்டவர் நந்தவனம் அழித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆருத்ரா தரிசனமான இன்று (திங்கட்கிழமை) காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் காலை 11 மணியளவில் சாமியின் ஆருத்ரா தரிசனம் பின்னர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

Next Story