பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை- அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏர்வாடி அருகே மாவடியில் மண் பானை மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஏர்வாடி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏர்வாடி அருகே மாவடியில் மண் பானை மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மண்பாண்ட தொழில்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே மாவடியில் ஒரு சில குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலை தலைமுறை, தலைமுறையாக செய்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறிய பானை முதல் பெரிய பானை வரை பல்வேறு வடிவங்களில் மும்முரமாக தயார் செய்து வருகின்றனர்.
பொங்கலிடுவதற்கு தேவையான மண்ணால் ஆன அடுப்புகளும், பானை மூடிகளும் கூட வடிவமைத்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பானைகள், அடுப்புகள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ரூ.50 முதல் ரூ.350 வரை பானைகளும், ரூ.50 முதல் ரூ.200 வரை அடுப்புகளும் விற்பனைக்கு உள்ளது.
மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்
பானை, அடுப்புகள் உற்பத்தி செய்ய தேவையான மண்ணுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தவிப்பு அடைந்துள்ளனர். குளங்களில் மண் எடுக்க அரசு பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளதால், அதற்குரிய ஆவணங்களை செலுத்துவதில் சிக்கல் நிலவுவதால் மண் கிடைக்காமல் பானை உற்பத்தி செய்வதில் தடை ஏற்படுவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மண்ணை குளங்களில் இருந்து இலவசமாக நிபந்தனைகள் ஏதும் இன்றி எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு
இதுபற்றி மண்பாண்ட தொழிலாளர்கள் அழகியநம்பி, முத்துக்குமார் ஆகியோர் கூறியதாவது:-
மனிதன் ஆரோக்கியமாக வாழ முன்னோர்கள் மண் பானைகள் மற்றும் பொருட்களையே பயன்படுத்தினர். மண் பானைகள் மறையவே புது, புது நோய்கள் தாக்க தொடங்கியுள்ளன. மண் பாண்டங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. மண் பாண்டங்களை பயன்படுத்தினால் நோய்கள் அணுகாது. ஆரோக்கியத்துடன் வாழ மக்கள் மண் பாண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story