இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்
களக்காடு அருகே இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம் அமைந்துள்ளது.
களக்காடு:
களக்காடு அருகே மேலவடகரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. கீழவடகரை, மேலவடகரை பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியில் கடந்த 1984-ம் ஆண்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதியதாக வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 37 ஆண்டுகளை கடந்து விட்டதால் ஸ்திர தன்மையை இழந்து காணப்படுகிறது. சுவர்களில் ஆங்காங்கே கீறல்கள் ஏற்பட்டுள்ளன. மேல்தளம் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. கட்டிடத்தை தாங்கும் காங்கிரீட் தூண்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஜன்னல்கள் கரையானுக்கு இரையாகி வருகின்றன. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் கட்டிடம் காட்சி அளித்து வருகிறது. இதனால் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த கட்டிடத்தின் வழியாக மாணவ-மாணவிகள் சென்று வருவதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுபற்றி மாவட்ட பா.ஜ.க. கல்வியாளர் அணி தலைவர் சேர்மன் துரை கூறுகையில் “கட்டிடம் அபாய நிலையில் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் முறையீடு செய்துள்ளோம். ஆசிரியர்களும் அறிக்கை அனுப்பி உள்ளனர். எனவே கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story