விவசாயிகளுக்கு நிவாரணம் உடனே வழங்க வேண்டும்


விவசாயிகளுக்கு நிவாரணம் உடனே வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Dec 2021 1:57 AM IST (Updated: 20 Dec 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய பேரியக்கம் வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்:
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய பேரியக்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்தேசிய பேரியக்கம்
தமிழ்த்தேசிய பேரியக்க தலைமை செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆனந்தன் வரவேற்றார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வைகறை, பழ.ராஜேந்திரன், அருணபாரதி, மாரிமுத்து, முருகன் விடுதலைச்சுடர், தென்னவன், தமிழ்மணி, இலக்குவன், வேல்சாமி, முழுநிலவன், ஜெயபால், மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழர் ஆன்மிகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவித்து வரும் ஈஷா யோகா மையத்தை தமிழக அரசு அரசுடைமையாக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஏற்கத்தக்கதல்ல. அதற்கு பதிலாக தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் பாரதிதாசன் இயற்றிய ”வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே”என்ற பாடலை அறிவிக்க வேண்டும். இந்த பாடலை புதுச்சேரி அரசு ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு நிர்வாகத்தில் தலையிடும் கவர்னருக்கு, தமிழக அரசு கேள்வி எழுப்பாமல் அமைதி காப்பதோடு, அத்துமீறல்களுக்கு துணைபோவதை கண்டிக்கிறோம். புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வழங்க வேண்டும். புதுச்சேரி அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதை கைவிட வேண்டும்.
விவசாயிகளுக்கு நிவாரணம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரண தொகை உடனே வழங்க வேண்டும். தமிழகத்தில் இந்திய அரசு நிறுவனங்களிலும் 90 சதவீதமும், தமிழக அரசில் 100 சதவீதம் தமிழர்களுக்கே வேலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும். கன்னியாகுமரியில் மலைகளை கனிமவள கொள்ளையில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story