பதவி, அதிகாரம் எப்போதும் நிரந்தரம் இல்லை - பசவராஜ் பொம்மை பரபரப்பு பேச்சு


பதவி, அதிகாரம் எப்போதும் நிரந்தரம் இல்லை - பசவராஜ் பொம்மை பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 20 Dec 2021 2:06 AM IST (Updated: 20 Dec 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

அன்பு, விசுவாசத்திற்கு முன்பாக பதவி, அதிகாரம் எப்போதும் நிரந்தரம் இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

ஹாவேரி:

அடிக்கல் நாட்டு விழா

  ஹாவேரி மாவட்டம் சிக்காம்வியில் பஞ்சமசாலி சமுதாயத்திற்கான சமுதாய பவன் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, புதிய சமுதாய பவனுக்கு அடிக்கல் நாட்டினார்.

  பின்னர் சிக்காம்வியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

அனைவருக்கும் நியாயம்

  நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறேன். பஞ்சமசாலி சமுதாயத்திற்காக புதிய சமுதாய பவன் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. இதுபோல், அம்பேத்கர் சிலையை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அந்த பணிகள் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறும். சிக்காம்வியில் சங்கொள்ளி ராயண்ணாவின் சிலை கூட அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  பஞ்சமசாலி சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நமது மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறப்பான நாள் விரைவில் வரும். அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது தலைமையிலான அரசின் நோக்கமாகும்.

பதவி நிரந்தரம் இல்லை

  மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் நான் முதல்-மந்திரி ஆகி உள்ளேன். இந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக உங்கள் முன் நிற்கிறேன். எனது தொகுதி சிக்காம்வி. இந்த தொகுதியில் இருந்து தான் நான் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி முதல்-மந்திரியாகி உள்ளேன். இந்த தொகுதியை விட்டு வெளியே சென்ற பின்பு தான் இந்த மாநிலத்தின் முதல்-மந்திரி, போலீஸ் மந்திரி உள்ளிட்ட பதவிகள். சிக்காம்வி தொகுதிக்கு வந்து விட்டால் நான் பசவராஜ் பொம்மை மட்டுமே. இது மட்டும் தான் நிரந்தரம்.

  இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. நாம் எத்தனை நாட்கள் இந்த உலகில் வாழ போகிறோம் என்று யாருக்கும் தெரியாது. அதுபோல், இந்த பதவியும், அதிகாரமும் எப்போதும் நிரந்தரம் இல்லை. உங்களது அன்பு, விசுவாசம் மட்டுமே பெரியது. உங்களது அன்புக்கு முன்பாக பதவியும், அதிகாரமும் பெரியது இல்லை. இதுபோன்று உணர்ச்சி பூர்வமாக பேசக்கூடாது என்று நினைத்தேன். உங்களை பார்த்ததும், என்னை அறியாமல் உணர்ச்சி பூர்வமாக பேசுகிறேன்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

பரபரப்பு

  கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மாற்றப்பட்டு முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். அவரது தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்த பின்பு, நடந்த இடைத்தேர்தல், மேல்-சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் பசவராஜ் பொம்மை மீது பா.ஜனதா மேலிட தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திக்கப்படும் என்று அமித்ஷா கூறி இருந்தார்.

  தேர்தல் தோல்விக்கு பின்பு உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி தலைமையிலான நடந்த பா.ஜனதா முதல-மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பசவராஜ் பொம்மை, பதவி நிரந்தரம் இல்லை என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்படுகிறாரா? என்ற சர்ச்சையும் உண்டாகி இருக்கிறது.

Next Story