மகுடஞ்சாவடி அருகே சோகம்: தீக்குளித்து பெண் தற்கொலை; குழந்தை தீயில் கருகியது-வீடும் முற்றிலும் எரிந்ததால் பரபரப்பு
மகுடஞ்சாவடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். வீடும் எரிந்து நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பிள்ளை:
மகுடஞ்சாவடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். வீடும் எரிந்து நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கணவன்- மனைவி தகராறு
மகுடஞ்சாவடி அருகே காளிகவுண்டம்பாளையம் அரண்மனைகாடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி தங்கமணி (வயது35), இவர்களுக்கு 6 வயதில் அகல்யா என்ற பெண் குழந்தை உள்ளது. சக்திவேல், தள்ளுவண்டியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் தங்கமணி கோபித்துக்கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
குழந்தையுடன் தீக்குளித்தார்
அதன்பிறகு மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார் சக்திவேல். நேற்று மகுடஞ்சாவடிக்கு வியாபாரம் செய்ய சக்திவேல் சென்று விட்டார். தங்கமணி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். திடீரென மண்எண்ணெயை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் அவருடைய மாமியார் பாப்பாத்தி ஓடி வந்தார்.
அங்கு தங்கமணி உடலில் தீப்பற்றி எரிந்தது. குழந்தை அகல்யாவும் தீயில் கருகினார். உடனே பாப்பாத்தி அகல்யாவை மீட்டார். தங்கமணி உடலில் எரிந்த தீ அவர்களது வீட்டிலும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர்.
வீட்டுக்குள் பிணம்
அதற்குள் தங்கமணி வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. தங்கமணியும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து வந்தனர். அகல்யாவை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிசிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தங்கமணி உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டதும், அதனால் குழந்தை கருகிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story