அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா


அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
x
தினத்தந்தி 20 Dec 2021 5:18 PM IST (Updated: 20 Dec 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனமான இன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனமான இன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். 

அதன்படி இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று  இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தொடர்ந்து இன்று காலை சாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

 பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. 

தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் அன்று கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

சாமி மாட வீதி உலா

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நடந்து முடிந்த தீபத் திருவிழாவின் போது சாமி மாட வீதி உலா மற்றும் தேரோட்டம் நடைபெற மாவட்ட நிர்வாகம் மூலம் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் சாமி தாிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா?, சாமி மாடவீதி உலா செல்ல அனுமதிக்கப்படுமா? என்று பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 

பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கோவில் நிர்வாகம் இன்று கோவிலில் ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர். இதனால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

சாமி மாட வீதியில் உலா வந்ததை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகள் முன்பும் மக்கள் திரண்டு இருந்து நடராஜரை தரிசனம் செய்தனர்.

 அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷமிட்டபடி சாமியுடன் பக்தர்களும் வந்தால்  திருவண்ணாமலை திருவிழா கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.

23-ந் தேதி முதல் தீப மை பிரசாதம்

தீப மை பிரசாதம் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story