தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
சங்கரராமேசுவரர் கோவில்
தூத்துக்குடியில் உள்ள பிரதான கோவில்களில் சங்கரராமேசுவரர் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
கடந்த 10 நாட்களாக மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று திருவாதிரை திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு திருவனந்தல், 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
ஆருத்ரா தரிசனம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில், காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது.
தொடர்ந்து பசு தீபாராதனை, தாண்டவ தீபாராதனை, திருமுறை பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 10.30 மணிக்கு நடராஜர் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 1.30 மணிக்கு சேர்க்கை நிகழ்ச்சியும், 2.30 மணிக்கு சேர்க்கை தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரம் ஜோதிர் நாயகி எட்டீஸ்வரர் மூர்த்தி கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடந்த 10 தினங்களாக தீபாராதனை, யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று திருவாதிரையை முன்னிட்டு சுவாமிக்கு 36 வகையான அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. மேலும் நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை, கோமாதா சிறப்பு பூஜை நடந்தது.
கழுகுமலை
கழுகுமலையில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கழுகாசலமூர்த்தி கோவில் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் தெற்கு வாசலில் வைத்து நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story