என்ஜினீயரிடம் தொழில் தொடங்க பணம் பெற்றுக்கொண்டு நண்பர் தலைமறைவு


என்ஜினீயரிடம் தொழில் தொடங்க பணம் பெற்றுக்கொண்டு நண்பர் தலைமறைவு
x
தினத்தந்தி 20 Dec 2021 8:52 PM IST (Updated: 20 Dec 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிடம் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் பணம் பெற்று கொண்டு தலைமறைவான நண்பரை போலீசார் கைது செய்தனர்.

பண உதவி

காஞ்சீபுரம் மாவட்டம், பெரும்பேர் கண்டிகை ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் லோகேஷ். இவர் பி.இ.மெக்கானிக்கல் படித்து விட்டு தற்போது வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர் பின்புறம் வசிக்கும் எபினேசர், திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி நசரத்பேட்டை, வரதராஜபுரம் கக்கன்ஜி தெருவை சேர்ந்த தினேஷ் (வயது 35) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு லோகேஷ் வெளிநாட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்த போது, அவரது நண்பர்களான எபினேசர், தினேஷ் ஆகியோர் தாங்கள் 2 பேரும் வேலையில்லாமல் இருந்து வருவதாகவும், உள்கட்டமைப்பு தொழில் நிறுவனத்தை தொடங்க தங்களுக்கு பண உதவி செய்ய வேண்டி கேட்டு கொண்டனர்.

நண்பர்கள் மோசடி

மேலும் தொழிலில் வரும் வருமானத்தில் முதலில் லோகேசுக்கு சேரவேண்டிய அசல் தொகையை திருப்பிக் கொடுப்பதாகவும், பின்னர் வரும் வருமானத்தில் 3 பேரும் பகிர்ந்து கொள்வோம் என்று அவரிடம் ஆசை வார்த்தை கூறினர்.

இதைநம்பிய லோகேஷ் ரூ.25 லட்சம் பணத்தை தனது நண்பர்களிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட நண்பர்கள் 2 பேரும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்திய நிலையில், சில நாட்களில் லோகேசுக்கு தெரியாமல் வேறு ஓரிடத்தில் நிறுவனத்தை மாற்றிக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் பகுதிக்கு வந்த லோகேஷ் விசாரித்த போது, தனது நண்பர்களே தன்னை மோசடி செய்து தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

கைது

இதுகுறித்து அவர் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜவகர் சப்-இன்ஸ்பெக்டர் சூரியக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தினேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள எபினேசரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story