அம்மையார்குப்பத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்


அம்மையார்குப்பத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 Dec 2021 9:10 PM IST (Updated: 20 Dec 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்கள் சரிவர இயங்காததை கண்டித்து அம்மையார்குப்பம் கிராமத்தில் அரசு பஸ்சை மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

பஸ் சிறை பிடிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் காட்டூர் கிராமத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் 2 அரசு பஸ்கள் சென்னை மாநகருக்கு புறப்பட்டு செல்கின்றன. இந்த பஸ்சில் காட்டூர் பகுதியில் இருந்தும் வழியில் உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் இருந்தும் பல மாணவர்கள் கல்லூரிக்கு சென்னை செல்கின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக இந்த 2 பஸ்களும் சரிவர இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனால் ஆத்திரமடைந்த அம்மையார்குப்பம் கிராம மக்கள் நேற்று காலை அந்த கிராமம் வழியாக திருத்தணிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ் தடம் எண் 48-ஐ சிறை பிடித்தனர்.

பொதுமக்கள் காத்திருப்பு

இதனால் அவர்கள் நடத்திய போரட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்றைய தினம் திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் உள்ள கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அனைத்து போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதனால் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால் பஸ்சை சிறைப்பிடித்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இதற்குள் தகவல் கிடைத்து அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி ஆனந்தி செங்குட்டுவன் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தினார்.

போக்குவரத்து பாதிப்பு

மக்களுடைய கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அரசு பஸ்கள் சீரான முறையில் இயங்க ஆவண செய்வதாக அவர் பொது மக்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் தாங்கள் சிறைபிடித்த பஸ்சை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story