மக்கள் குறைதீர்க்கும் நாளில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்க்கும் நாளில் நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரி, டிச.21-
கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பொதுமக்கள் உதவி தொகைகள், சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 312 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளி தாலுகாவை சேர்ந்த 7 இருளர் இன மக்களுக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். ஓசூர் தாலுகா மத்திகிரியை சேர்ந்த 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான விபத்து நிவாரண உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.7,200 வீதம் 10 கண் பார்வையற்ற மாணவர்களுக்கு ரூ.72 ஆயிரம் மதிப்புள்ள வாசிப்பு கருவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீட்டு நடத்தி மோசடி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓசூர் ஈஸ்வர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், திண்டுக்கல்லை சேர்ந்த சையத் பாஷா என்பவர் ஓசூர் தர்கா பகுதியில் குடியிருந்து வந்தார். அவர் 10 ஆண்டுகளாக ஏல சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் சீட்டு பணம் கட்டி வந்தனர். கடந்த 6 மாதங்களாக சையது பாஷா, சீட்டு பணத்தை சரிவர கொடுக்காமல் பலரை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story