தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Dec 2021 9:44 PM IST (Updated: 20 Dec 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு;
மின்விளக்குகள் ஒளிர்கிறது

தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் திருக்குமரன். இவர் கடையம் யூனியன் ரவணசமுத்திரம் விலக்கில் இருந்து திருமலையப்பபுரம் சாலை வளைவு பகுதி வரை மின்விளக்குகள் எரியவில்லை என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 17-ந் தேதி பிரசுரமானது.
இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, மின்விளக்குகளை சரிசெய்து உள்ளனர். தற்போது மின்விளக்குகள் ஒளிர்கிறது. மின்விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க உதவிய ‘தினத்தந்தி’க்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார். 

பூங்கா திறக்கப்படுமா? 

நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டில் இருந்து சமாதானபுரம் செல்லும் வழியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறி கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு கிடக்கிறது. ஆனால் அங்கு பராமரிப்பு பணி நடக்கிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் காலை நேரத்தை விட மாலை நேரத்தில் பூங்கா திறந்தால் பொதுமக்கள், பள்ளிக்கூட சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சேக் முகம்மது கான், கோட்டூர். 

மழையால் சேதம் அடைந்த பாலம் 

மூலைக்கரைப்பட்டி முதல் சிந்தாமணி வரை மணிமுத்தாறு கால்வாயில் உயர்மட்ட பாலம் உள்ளது. தற்போது, பெய்த மழை வெள்ளத்தால் இந்த பாலம் சேதம் அடைந்து காணப்படுகிறது. கரை பகுதியும் சேதம் அடைந்து பாலம் மட்டும் தனியாக நிற்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
தஸ்நேவிஸ் மரியான், சிந்தாமணி.  

தாகம் தீர்க்காத அடிபம்பு 

நெல்லை டவுன் குற்றாலம் ரோடு வாய்க்கால் பாலம் அருகில் அடிபம்பு உள்ளது. இந்த அடிபம்பை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கடை ஊழியர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக தண்ணீர் வரவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலையில் புழுதி பரப்பதால், அடிபம்பு முழுவதும் புழுதி படிந்து காட்சி அளிக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இந்த அடிபம்பில் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிர்வேல், டவுன்.

ஆபத்தான மின்கம்பம் 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே மரந்தலை கிராமம் பரதர் தெருவில் உள்ள மின்கம்பம் மேற்பகுதியானது சிமெண்டு பூச்சிகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கார்த்தீசன், மரந்தலை.

பழுதடைந்த கட்டிடத்தால் அவதி 

திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள ரெயிலடி விநாயகர் கோவில் எதிரில் ரெயில்வே ஊழியர்களுக்கு என்று ஓட்டு வீடுகள் இருந்தது. இந்த வீடுகளில் தற்போது யாரும் இல்லை. இதனால் இந்த கட்டிடங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசுகிறது. அங்கு சிலர் இயற்கை உபாதைகள் கழிப்பதுடன் குப்பைகளை கொட்டுகிறார்கள். 
மேலும் இதற்கு எதிரே தான் ரெயிலடி விநாயகர் கோவில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த ரெயில்வே நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வமுருகன், திருச்செந்தூர். 

Next Story