துணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்
துணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்
அனுப்பர்பாளையம்
துணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
ஆலோசனைக்கூட்டம்
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட, மாநகர, இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகர், மாநகர தலைவர் ஜான் வல்தாரீஸ், செயலாளர் மூலக்கரை சுரேஷ்குமார், பொருளாளர் பொன்ராஜ் என்ற முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் லாலா கணேசன் வரவேற்றார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் மணி, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட மருந்து வியாபாரிகள் சங்க தலைவர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டு முயற்சி
கூட்டத்தில் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-
வியாபாரிகளை பாதுகாக்கவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயல்பட்டு வருகிறது. வணிகர்களும், வியாபாரிகளும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக பில் வாங்கி தொழில் செய்ய வேண்டும். அரசு மேற்கொள்ளும் நல்ல காரியங்களுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசுத்துறை அதிகாரிகள் வியாபாரிகளிடம் அத்துமீறும்போது மாவட்ட கலெக்டர், போலீஸ் கண்காணிப்பாளர், கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட வேண்டும். வருகிற 28-ந்தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் பொதுக்குழு நடைபெறும். இணைக்கப்படாத சங்க நிர்வாகிகளுக்கு பேரமைப்பு எந்த உதவியும் செய்யாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜி.எஸ்.டி வரிகுறைப்பு
முன்னதாக விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். துணிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லாமல் இருந்த நிலையில் 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. தற்போது அது 12 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் இதுதொடர்பாக முதல்-அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை சந்தித்து முறையிட உள்ளோம்.
கொரோனா காலத்தில் வணிகத்தை காப்பாற்றுவதற்கே வியாபாரிகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வரி உயர்வு என்பது இருக்கக்கூடாது. ஜி.எஸ்.டி. வரி உயர்வை குறைக்காவிட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
நூல்விலை உயர்வு
நூல்விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாய ஆலைகள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றன. இதனால் வேலை வாய்ப்பு குறைந்து, வணிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. நூல் விலையில் அடிக்கடி மாற்றம் இருக்கக்கூடாது. வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தகம் மூலமாக உள்நாட்டு வியாபாரத்தை சூறையாடி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு லைசென்சு வாங்குவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அத்துமீறும் அரசு அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் குமரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story