திருப்பூரில் 180 வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ்
திருப்பூரில் 180 வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ்
திருப்பூர்,
திருப்பூரில் 180 வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதனால் அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
வீடுகளை காலி செய்ய உத்தரவு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், செட்டிப்பாளையம் கிராமம் ஆத்துப்பாளையம் அம்பேத்கர்நகர், பாரதிநகர், திருவள்ளுவர் நகர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள ஆற்றின் கரையோரம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை காலி செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறினார்கள். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடு கொடுப்பதாக கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி மீண்டும் பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 180 குடும்பத்தினர் சொந்த வீடுகளை இழக்க வேண்டியுள்ளது. எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டம்
15.வேலம்பாளையம் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் இந்துக்கள் அதிகமாக வசித்து வருகிறோம். இந்த பகுதியில் எந்தவித அனுமதியும் பெறாமல் தொழுகை கூடம் உள்ளது. இந்த கட்டிடத்தை அகற்ற சென்னை ஐகோர்ட்டு திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. தொடர்ந்து அங்கு தொழுகை நடக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள கழிப்பிடத்தை பட்டியலினத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுத்தம் செய்ய வலியுறுத்தியதுடன், சாதிப்பெயரை சொல்லி திட்டியதாக பள்ளி தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பாலித்தீன் ஆலைக்கு எதிர்ப்பு
பகுஜன் சமாஜ் கட்சியினர் அளித்த மனுவில், காங்கேயம் அருகே சாவடிபாளையம் செல்லும் பாதையில் சட்டவிரோதமாக கிராவல் மண் மற்றும் கனிம வளங்களை இரவு பகலாக தோண்டி எடுக்கிறார்கள். முறையான அனுமதியில்லாமல் இந்த பணி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பெருமாநல்லூர் ஊராட்சி பொடாரம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வேஸ்ட் குடோன் என்ற பெயரில் அனுமதி பெற்று பாலித்தீன் மறுசுழற்சி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளன. ஆலையில் இருந்து துர்நாற்றம், பாலித்தீன் துகள்கள் காற்றில் பறப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தோல் நோய் ஏற்படுகிறது. இந்த ஆலையை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆக்கிரமிப்பு
பல்லடம் பருவாய் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் அளித்த மனுவில், கடந்த 2001-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரான எங்களில் 45 பேருக்கு தலா 50 சென்ட் அளவு நிலம் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்டது. 24 ஏக்கர் நிலம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நிலத்தை தனித்தனியாக அவரவர்களுக்கு அளவீடு செய்து கொடுக்காமல் இருந்தனர். பல காரணங்களை கூறி தட்டிக்கழித்தனர். இந்த நிலையில் அந்த நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்றி எங்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தர்ணா
அன்னை இந்திரா பொது தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். சங்கத்தின் பெயரை பெண் ஒருவர் தவறாக பயன்படுத்தி பணம் வசூலிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே புகார் கொடுத்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு மனு ஏற்பு ரசீது வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு சமீபகாலமாக மனுதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று நடந்த முகாமில் மனுதாரர்களுக்கு முந்தைய முறைப்படி மனு ஏற்பு ரசீது வழங்கப்பட்டது. இதற்கு மனுதாரர்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
Related Tags :
Next Story