தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் விரிசல் விட்டுள்ளது


தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் விரிசல் விட்டுள்ளது
x
தினத்தந்தி 20 Dec 2021 10:12 PM IST (Updated: 20 Dec 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் விரிசல் விட்டுள்ளது

உடுமலை, 
உடுமலை ராஜலட்சுமி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் விரிசல் விட்டுள்ளது.
நெல்லை சம்பவம்
நெல்லையில் கடந்த 17-ந்தேதி பள்ளிக்கூட கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இதைத்தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த, தரமற்ற கட்டிடங்கள், சுவர்கள் உள்ளதா என்று ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
உடுமலை நகராட்சி பள்ளி
உடுமலை நகராட்சி 8-வதுவார்டுக்குட்பட்ட ராஜலட்சுமி நகரில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின்
முன்பகுதி சுற்றுச்சுவரின் ஒருபகுதியில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த சுவறில் ஆங்காங்கு சில இடங்களிலும் விரிசல்கள் விட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் விளையாடும் போதோ மற்ற நேரங்களில் அந்த சுற்றுச்சுவரில் சாய்ந்தாலோ அந்த சுவர் இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளதாகக்கூறப்படுகிறது.
அதனால் வகுப்பறையை விட்டு வெளியே வரும் மாணவ, மாணவிகள் சுவர் விரிசல் விட்டுள்ள பகுதிக்கு செல்லாதபடி ஆசிரியர் கண்காணித்து வருகிறார். அதனால் பள்ளியின் முன்பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு புதியதாக சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என்பது பெற்றோர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அத்துடன் மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிவந்து அந்த பள்ளிக்கு முன்பு உட்கார்ந்து பிளாஸ்டிக் டம்ளர்களில் மது ஊற்றி குடித்து விட்டு காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை பள்ளிக்கு முன்பும், பக்கவாட்டிலும் போட்டு செல்கின்றனர்.சில குடிமகன்கள் காலி மதுபாட்டில்களை பள்ளி வளாகத்திற்குள்ளும் வீசிவிட்டு செல்கின்றனர்.
பூங்கா பள்ளி
உடுமலை சர்தார் வீதியில் உள்ள நகராட்சி எக்ஸ்டன்சன் நடுநிலைப்பள்ளியின் (பூங்கா பள்ளி) வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ள சிலாப் கற்கள் பெயர்ந்து பள்ளமாகியுள்ளன.அந்த இடத்தில் மாணவ, மாணவிகள் செல்லும்போது சிலாப் கற்கள் தடுக்கி கீழே விழக்கூடிய நிலை உள்ளது. அதனால் அந்த இடத்தில் மராமத்து பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இந்த பள்ளிக்கு முன்பும் காலை, மாலை நேரங்களில் குடிமகன்கள் மது குடித்துவிட்டு காலி மதுபாட்டில்கள் மற்றும் டம்ளர்களை பள்ளிக்கு முன்பு போட்டுச்செல்கின்றனர்.
அதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பள்ளிகளுக்கு முன்பு குடிமகன்கள் மது குடிப்பதை தடுக்கும் வகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story