குடிமங்கலம் அருகே தாய் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
குடிமங்கலம் அருகே தாய் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
திருப்பூர்,
குடிமங்கலம் அருகே தாய் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வினீத் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தரைத்தளத்தில் வழக்கமாக நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்ட அரங்கத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 2-வது தளத்தில் உள்ள அரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இருப்பினும், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் தரைத்தளத்தில் மனுவுடன் அமர்ந்து இருந்தனர்.
கலெக்டர் வினீத் தரைத்தளத்துக்கு வந்து வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் காத்திருந்த பகுதிக்கு வந்து மனுக்களை பெற்றுச்சென்றார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆத்துகிணத்துப்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆத்துகிணத்துப்பட்டியில் 8 ஏக்கர் நிலத்தில் தனிநபர்கள் தாய் கோழிப்பண்ணை அமைத்து கோழி குஞ்சுகள் மற்றும் முட்டை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலை அமைந்தால் வெளியேற்றப்படும் திட, திரவ கழிவுகளால் காற்று மற்றும் நீர் மாசு ஏற்படும். அதனால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். கடும் துர்நாற்றத்தின் காரணமாக கொசுக்கள், பூச்சிகள், ஈக்கள் அதிகமாக வரும். இந்த தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும், ஊராட்சி தலைவருக்கும் மனு கொடுத்துள்ளோம். எனவே எங்கள் பகுதியில் தாய் கோழிப்பண்ணை தொழிற்சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
திருமூர்த்தி அருவி பராமரிப்பு
திருமூர்த்தி மலை செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் அளித்த மனுவில், திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவி ஆனைமலை காப்புக்காட்டில் உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டுக்கு முன் இந்த அருவியை வனத்துறை மூலம் மலைவாழ் மக்கள் பராமரித்து வந்தனர். 2007-ம் ஆண்டுக்கு பிறகு கோவில் நிர்வாகம் கட்டணம் வசூலித்து பராமரித்து வந்தது. கடந்த ஜனவரி மாதம், இந்த அருவியை பராமரிக்கவும், அருவியை சுற்றியுள்ள வனங்களை பாதுகாக்கவும் திருமூர்த்திமலை வன உரிமை குழு மூலமாக கட்டணம் வசூலித்து பராமரிக்க வனத்துறை உத்தரவிட்டது.
அதில் வரும் வருமானத்தை வைத்து பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் 6 பேருக்கு கூலி வழங்கவும், மீதம் உள்ள வருமானத்தில் ஊர்மக்களுக்கு பயன்படுத்தலாம் என்று வனஉரிமை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கோவில் நிர்வாகம் பராமரிப்பு பணிகளை செய்வது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எனவே மறுபரிசீலனை செய்து வனஉரிமை குழுவுக்கு அருவியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story