வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா


வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
x
தினத்தந்தி 20 Dec 2021 11:01 PM IST (Updated: 20 Dec 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

வேலூர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசனம்

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஆன்மிக மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில்தான் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களை பாடி பக்தர்கள் சிவன் கோவிலில் வழிபடுவார்கள்.

மேலும் மார்கழி மாத திருவாதிரை நாளில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். நடராஜருக்கு மார்கழி மாத திருவாதிரை நாளில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் விசேஷமானது ஆகும்.

அதன்படி வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. கோவிலில் தண்ணீர் தேங்கி காணப்பட்டதால் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நடராஜருக்கு அபிஷேகம்

இந்தநிலையில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6-30 மணிக்கு நடராஜர் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.

நேற்று அதிகாலை 4-30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஆதிநடராஜருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து 6-30 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் ஆகியோர் கோபுர தரிசனம் நடந்தது. பின்னர் திருவெம்பாவை பாடலை பக்தர்கள் பாடினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்து சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் எதிரே உள்ள மைதானத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்திருந்தனர்.

வேலூர் பேரிப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாத சுவாமி கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம்

குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், உற்சவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி வீதிஉலா நடைபெற்றது. 

இதில் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Next Story