மாயமான மாணவி ரத்த காயங்களுடன் ஏரியில் பிணமாக கிடந்தார்


மாயமான மாணவி ரத்த காயங்களுடன் ஏரியில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 20 Dec 2021 11:08 PM IST (Updated: 20 Dec 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மாயமான மாணவி ஏரியில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது வெண்ணைக்குழி பகுதியை சேர்ந்தவர் வேலு மகள் கண்ணகி (வயது 19). இவர்  வேப்பூர் அடுத்த ஐவதுகுடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்  டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். கண்ணகி கடந்த சில தினங்களாக தனது தாய் ராஜலட்சுமியுடன் மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வேதவள்ளி என்பவருடைய வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 18-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணகி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மாயமான கண்ணகியை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். இருப்பினும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.

ரத்த காயங்களுடன் பிணம்

இதையடுத்து ராஜலட்சுமி மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். 
இந்த நிலையில் மங்கலம்பேட்டை அடுத்த ரூபநாராயணநல்லூர் ஏரியில் ரத்த காயங்களுடன் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று மங்கலம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது மாயமான கண்ணகி என்பது தெரியவந்தது. 
அதைத்தொடர்ந்து கண்ணகி உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீஸ் விசாரணை

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணகியை யாரேனும் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரித்து வருகிறார்கள். 
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாயமான மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டால் தான் அவர் சாவுக்கான காரணம் தெரியவரும் என்றனர். மாயமான மாணவி ரத்த காயங்களுடன் ஏரியில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story