தென்கோவனூர் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே தென்கோவனூர் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே தென்கோவனூர் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசன வாய்க்கால் தலைப்பு மதகு
கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறில் தென்கோவனூர் பாசன வாய்க்கால் தலைப்பு மதகு உள்ளது. இந்த பாசன வாய்க்கால் மதகு தென்கோவனூரில் உள்ள 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு கோரையாற்றிலிருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஏற்படுத்தப்பட்டது.
தென்கோவனூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல், உளுந்து, பயறு, பருத்தி சாகுபடி பணிகளை செய்து வரும் அப்பகுதி விவசாயிகள் தென்கோவனூர் பாசன வாய்க்காலில் கடந்த சில ஆண்டுகளாக கோரையாற்றிலிருந்து வரும் தண்ணீர் வருவதில்லை என்றும், ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் போது கூட தென்கோவனூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.
விவசாய பணிகள் பாதிப்பு
மேலும் கோரையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பாசன வாய்க்கால் மதகை விட்டு தண்ணீர் கடந்து வருவதில்லை. தண்ணீர் வரும் காலங்களில் கூட பாசன வாய்க்கால் வறண்ட நிலையில் உள்ளது. இதனால் பாசன வாய்க்கால் நெடுகிலும் புதர் செடிகள் சூழ்ந்து அவல நிலை உள்ளது.
இதனால் விவசாய பணிகள் பாதிப்பு அடைவதாகவும், ஆற்றில் தண்ணீர் வரும் போது கூட பயிர்களை காப்பாற்ற பம்பு செட் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
தூர்வார வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள தென்கோவனூர் பாசன வாய்க்கால் தலைப்பு மதகை சீரமைக்க வேண்டும். மேலும் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story