அ.தி.மு.க. நிர்வாகிகள் மோதல்; 4 பேர் காயம்
உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். இதில் 4 பேர் காயமடைந்தனர். கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. 2-ம் கட்ட அமைப்பு தேர்தல் நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி உள்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நகர துணை செயலாளர் கந்தனுக்கும், சேவல்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
கார் கண்ணாடி உடைப்பு
இதுபற்றி அறிந்த முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் விரைந்து வந்து, இருவரையும் சமாதானப்படுத்தினார். இதையடுத்து கூட்டம் முடிந்ததும் சேவல்குமார், அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது கந்தன் ஆதரவாளர்கள் சேவல்குமார் சென்ற காரை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காரை அடித்து நொறுக்கினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இதை சற்றும் எதிர்பாராத சேவல்குமாரின் ஆதரவாளர்கள் ஓடிவந்து, தகராறில் ஈடுபட்டனர்.
மோதல்
இருவரது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகம் முன்பு உள்ள கடலூர்-திருவந்திபுரம் சாலையில் மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருதரப்பை சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புக்காக அ.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story