பனை மரத்தில் கார் மோதல்; தம்பதி உள்பட 3 பேர் பலி
கடலூரில் பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள்.
கடலூர் முதுநகர்,
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள நீர்முளை பகுதியைச் சேர்ந்தவர் ராமு(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி லலிதா(60). இவர்களது மகள் பிரேமலதா. இவர் சென்னை ஆவடி காமராஜ் நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ராமுவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவா் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்தார்.
இதற்காக அவரது மருமகன் ரமேஷ், தனது காரை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அந்த காரை சென்னை ஆவடி ஜே.பி.எஸ்டேட் பகுதியை சேர்ந்த கோதண்டம்(45) என்பவர் ஓட்டி சென்றார். இதையடுத்து அந்த காரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமு, லலிதா ஆகியோர் சென்னைக்கு புறப்பட்டனர்.
3 பேர் பலி
கடலூர் பச்சையாங்குப்பத்தில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி சாலையோர பனை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இதில் கோதண்டம், லலிதா ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பலத்த காயமடைந்த ராமுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார்.
கார் மீட்பு
இது குறித்த தகவலின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான டிரைவர் கோதண்டத்திற்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், நிர்மல் என்கிற மகனும், கீர்த்தனா என்கிற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story