மாநகராட்சி, நகராட்சி வார்டு மறுவரையறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் 4 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
நாகர்கோவிலில் நடைபெற்ற மண்டல அளவிலான மாநகராட்சி, நகராட்சி வார்டு மறுவரையறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் 4 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நடைபெற்ற மண்டல அளவிலான மாநகராட்சி, நகராட்சி வார்டு மறுவரையறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் 4 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.
கருத்துக்கேட்பு கூட்டம்
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போல கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் குமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் வரைவு வார்டு மறுவரையறை குறித்த மண்டல அளவிலான கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இந்த கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சம்பந்தப்பட்ட 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்துக்கு தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் பழனிகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதிகளை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் 2 சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது. அந்த சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் வார்டுகள் பிரிப்பதை எந்தெந்த வழிகாட்டுதலின்படி கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரைவு வார்டு மறுவரையறை கருத்துகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட அளவிலும் வெளியிடப்பட்டு அக்கருத்துகளின் மீது அரசியல் கட்சியினர், பொதுமக்களின் ஆட்சேபனை மற்றும் கருத்துகள் தொடர்பான மனுக்கள் நேற்று வரை பெறப்பட்டன.
12 மனுக்கள் பெறப்பட்டன
மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தற்போது நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆட்சேபனைகள், கருத்துகளை நேரடியாக தெரிவித்தனர். அதுதொடர்பாக 12 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதோடு வருகிற 24-ந் தேதி வரை மனுக்கள் பெறப்படும். அந்த மனுக்களை பரிசீலனை செய்து 24-ந் தேதி அன்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு மறுவரையறை ஆணையத்திற்கு உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் தெங்கம்புதூர், ஆளூர் ஆகிய பேரூராட்சிகளை நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் ஆகிய பேரூராட்சி பகுதிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சி புதிதாக உருவாக்கப்பட இருக்கிறது. எல்கை விரிவாக்கம் செய்யப்பட்டதன் அடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 52 வார்டுகளும், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சிக்கு 33 வார்டுகள் என நிர்ணயம் செய்தும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
கலெக்டர்கள்
இதே போல திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் நகராட்சிகளை மறுவரையறைப்படுத்தியது குறித்தும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் சுந்தரவல்லி, மறுவரையறை உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கலெக்டர்கள் அரவிந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு (திருநெல்வேலி), செந்தில்ராஜ் (தூத்துக்குடி), கோபால சுந்தரராஜ் (தென்காசி), குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story