குமரியில் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது


குமரியில் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 21 Dec 2021 12:16 AM IST (Updated: 21 Dec 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 3 மாணவர்கள் பலியான சம்பவத்தின் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் பள்ளிகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

நாகர்கோவில், 
நெல்லையில் 3 மாணவர்கள் பலியான சம்பவத்தின் எதிரொலியாக குமரி மாவட்டத்தில் பள்ளிகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.
பள்ளிகள் ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் அரங்கேறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பள்ளிகளை ஆய்வு செய்யும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,232 பள்ளிகள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் கல்வித்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினருக்கு எந்தெந்த பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற விவரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கட்டிடங்கள் சேதம்
இந்த நிலையில் ஆய்வு குழுவினர் நேற்று தங்களது பணிகளை தொடங்கினர். அனைத்து பள்ளிகளிலும் உள்ள கட்டிடத்தின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கட்டிடங்கள் முறையான அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது.
முக்கியமாக பள்ளிகளில் உள்ள கழிவறை கட்டிடங்கள், பள்ளியின் சுற்றுச்சுவர் ஆகியவற்றை ஆய்வு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில பள்ளிகளில் பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்திருந்தது தெரியவந்தது. அது குறித்த விவரங்களை ஆய்வு குழுவினர் சேகரித்து உள்ளனர். மேலும் ஒரு சில பள்ளிகளில் உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.
இணை இயக்குனர் ஆய்வு
இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் மொத்தம் 1,232 பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் அரசு உத்தரவுபடி அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் எப்படியும் 5 நாட்கள் வரை நடக்கும். எனினும் ஆய்வு பணியை விரைந்து முடிக்க திட்டமிட்டு உள்ளோம். அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்த பிறகு அதற்கான அறிக்கை பள்ளிக்கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும். பள்ளிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். பின்னர் குழுவுடன் இணைந்து அவரும் ஆய்வு செய்ய உள்ளார்” என்றார்.


Next Story