பாறையில் இருந்து ‘சிப்பி’ எடுப்பதில் மீனவர்கள் இடையே பிரச்சினை
பாறையில் இருந்து ‘சிப்பி’ எடுப்பதில் மீனவர்கள் இடையே பிரச்சினை
குளச்சல்,
குறும்பனை கடலில் பாறையில் இருந்து ‘சிப்பி’ எடுப்பதில் மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கட்டுமரம் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சிப்பி சீசன்
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடந்த மாதம் முதல் சிப்பி எனப்படும் தோடு மீன் எடுக்கும் சீசன் நடந்து வருகிறது. கடல் பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பியை மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் மூழ்கி சென்று எடுத்து வருவர்.
தற்போது குமரி கடற்கரை கிராமங்களில் சிப்பி எடுக்கும் தொழில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் கடல் பாறையில் இருக்கும் சிப்பியை மீனவர்கள் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வாணியக்குடி, குறும்பனை மீனவர்களிடையே குறும்பனையில் உள்ள பட்டோடி பாறையில் சிப்பி எடுப்பது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
கட்டுமரம் சிறைபிடிப்பு
இந்நிலையில் நேற்று காலையில் வாணியக்குடி மீனவர்கள் குறும்பனை கடல் பட்டோடி பாறையில் இருந்து சிப்பி எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த குறும்பனை மீனவர்கள் விரைந்து சென்று வாணியக்குடி மீனவர்களின் ஒரு கட்டுமரத்தை சிப்பிகளுடன் சிறைபிடித்தனர்.
இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர் குறும்பனை மீனவர்கள் குளச்சல் கடல் காவல் நிலையம் முன் திரண்டு சிப்பி எடுக்கும் பிரச்சினையில் சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீன் வளத்துறையின் கடலோர அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் ரோஸ் சிங், குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பேச்சுவார்த்தை
பின்னர் குறும்பனை பங்குத்தந்தை ஸ்டீபன், வாணியக்குடி பங்குத்தந்தை ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வாணியக்குடி மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் யேசுதாசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்சிலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பட்டோடி பாறையில் குறும்பனை, வாணியக்குடி ஆகிய இரு ஊர் மீனவர்களும் சிப்பி எடுக்கலாம் எனவும், சிறைப்பிடிக்கப்பட்ட வாணியக்குடி கட்டுமரத்தை குறும்பனை மீனவர்கள் விடுவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த முடிவை இரு கிராம மீனவர்களும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story