ராஜேந்திரபாலாஜி உறவினர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்ற மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது?-தலைமை நீதிபதி முடிவு செய்ய பரிந்துரை


ராஜேந்திரபாலாஜி உறவினர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்ற மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது?-தலைமை நீதிபதி முடிவு செய்ய பரிந்துரை
x
தினத்தந்தி 20 Dec 2021 7:54 PM GMT (Updated: 20 Dec 2021 7:54 PM GMT)

ராஜேந்திரபாலாஜி உறவினர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.

மதுரை, 

ராஜேந்திரபாலாஜி உறவினர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.

போலீசாருக்கு உத்தரவிட மனு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சகோதரி. ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு விசாரணைக்காக எனது மகன்கள் வசந்தகுமார், ரமணா மற்றும் டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் சமீபத்தில் திருத்தங்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் துன்புறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. எனவே கே.டி.ராஜேந்திரபாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும், எனது மகன்கள் உள்ளிட்டவர்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக கடந்த சனிக்கிழமை விசாரித்த ஐகோர்ட்டு, “குற்றச்சாட்டுக்கு ஆளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள். விசாரணை செய்யுங்கள். ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்தது ஏன்?” என கேள்வி எழுப்பி, இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

சிறப்பு கோர்ட்டு

இந்தநிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “முன்னாள் மற்றும் நடப்பு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுதான் இந்த மனுவையும் விசாரிக்க இயலும்” என்றார். அதற்கு நீதிபதி, “மனுத்தாக்கல் செய்தவர்கள் எம்.எல்.ஏ.க்களோ, எம்.பி.க்களோ, அல்லது முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களோ இல்லை. பின்னர் இந்த வழக்கை அங்கு ஏன் மாற்ற வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு வக்கீல், “இந்த மனுவை தாக்கல் செய்திருப்பவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் மீதான வழக்கிற்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

தலைமை நீதிபதி

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை எந்த கோர்ட்டு விசாரிக்க பட்டியலிடுவது என்பதை முடிவு செய்வதற்காக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து, அவரது பார்வைக்கு கொண்டு செல்லும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story