பீடி கம்பெனியை பெண்கள் முற்றுகை
நெல்லை மேலப்பாளையத்தில் பீடி கம்பெனியை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரி, அச்சங்குன்றம், சுரண்டை சுற்று வட்டார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனியார் பீடி கம்பெனியின் கீழ் ஏராளமான பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பீடி சுற்றும் பெண்கள் நேற்று நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அந்த பீடி கம்பெனி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். 400-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சம்பள பாக்கியை உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்குவது என்றும், வருங்கால வைப்பு நிதியை சம்பந்தப்பட்ட தொழிலாளரின் பி.எப். கணக்கில் 2 மாத கால அவசாகத்தில் செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இலை, தூள் வழங்கி வேலை வாய்ப்பு அளிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெண்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story