கூடங்குளம் அணுமின் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக்கோரி கூடங்குளம் அணுமின் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வள்ளியூர்:
உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக்கோரி கூடங்குளம் அணுமின் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையம்
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3, 4-வது அணு உலைக்கான பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து உள்ளது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 ஆண்டுகள் தற்காலிக பணிக்கான பொறியாளர் பதவிக்கு எழுத்துத்தேர்வு நேற்று முன்தினம் செட்டிகுளம் அணுவிஜய் டவுன்ஷிப்சில் நடந்தது. 39 என்ஜினீயர் பணியிடங்களுக்கு சுமார் 1,800 பேர் தேர்வு எழுதினர். இதில் 139 பேர் மட்டும் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முக தேர்வு நடக்க இருந்தது.
கிராம மக்கள் முற்றுகை
இதற்கிடையே எழுத்து தேர்வில் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டும் யாருக்கும் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் நேற்று காலையில் கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு தலைமையில் அணுமின் நிலைய வளாகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், ஜான்ஸ் ரூபா, பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கன்துறை இந்திரா, விஜயாபதி சகாயராஜ் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனால் பாதுகாப்பு கருதி அணுமின் நிலைய முன் பகுதி கேட் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்லும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் திரும்பி சென்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உள்ளூரில் படித்த இளைஞர்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்துவது என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
சமாதான கூட்டம்
பின்னர் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் சிந்து தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் மனோகர் காட்போலே, திட்ட இயக்குனர் சுரேஷ், மனிதவள மேம்பாட்டு பொதுமேலாளர் அன்புமணி மற்றும் போராட்டக்காரர்கள் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட 20 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கும் நேர்முகத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில் இன்று நடக்க இருந்த நேர்முக தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story