சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
நெல்லை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடந்தது.
திருவாதிரை திருவிழா
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை திருவிழா 11-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.
17-ந் தேதி இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனமும், 18-ந் தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகமும், காலை 5.30 மணிக்கு கோபூஜையும், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. மதியம் 2 மணிக்கு அழகிய கூத்தருக்கு திருநடன தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதியம் 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா வருதலும், மாலை 5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், இரவு 7.30 மணிக்கு பிற்கால அபிஷேகமும், இரவு 10 மணிக்கு அழகிய கூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளலும் நடந்தது.
நெல்லையப்பர் கோவில்
இதேபோல் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தாமிர சபையில் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி வைத்தியநாத சுவாமி கோவில், அம்மநாத சுவாமி கோவில் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், தாண்டவ தீபாராதனைகளும் இடம் பெற்றன.
இதேபோல் திசையன்விளை அருகே குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது.
Related Tags :
Next Story