8 மாதங்களுக்கு பிறகு அனுமதி: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
8 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அய்யப்ப பக்தர்களுக்கும் குவிந்தனர்.
தென்காசி:
8 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அய்யப்ப பக்தர்களுக்கும் குவிந்தனர்.
குற்றாலம் சீசன்
தென் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இடையில் அரசு அளித்த தளர்வுகளின்படி சில நாட்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அப்போது அருவிகளில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. அதன் பின்னர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
பல்வேறு தரப்பினர் கோரிக்கை
மேலும் குற்றாலத்தை மட்டும் நம்பி இருக்கும் கடை வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஆட்டோ, கார் டிரைவர்கள் ஆகியோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். கொரோனாவின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் அப்போதும் குற்றாலத்தில் தொடர்ந்து தடை நீடித்தது.
இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
குளிக்க அனுமதி
இந்த நிலையில் நேற்று முதல் குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் அறிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது பழனி நாடார் எம்.எல்.ஏ. மெயின் அருவிக்கு மலர் தூவினார்.
பின்னர் சுற்றுலா பயணிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அவர்களுக்கு குற்றாலம் பேரூராட்சி சார்பில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக அவர்களுக்கு மெயின் ரோட்டில் இருந்து அருவிக்கு செல்லும் பாதையில் வைத்து கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தப்பட்டுள்ளதா? என சோதனை செய்யப்பட்டது. இதற்கான சான்று வைத்துள்ளவர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
உற்சாக குளியல்
சுமார் 8 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி கிடைத்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளைவிட அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நேற்று முன்தினம் இரவிலேயே குற்றாலத்துக்கு வந்து காத்திருந்தனர். காலை 6 மணிக்கு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. ஒரு முறைக்கு குறைவான நபர்களே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை செயல்படுத்தும் ஏற்பாடுகளை குற்றாலம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி (பொறுப்பு) மாணிக்கராஜ், சுகாதார அலுவலர் ராஜகணபதி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story