கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தா.பழூர்:
சிறப்பு அலங்காரம்
ஒவ்வொரு ஆண்டும் நடராஜப்பெருமானுக்கு 6 முக்கிய நாட்களில் மட்டுமே அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஆருத்ரா தரிசன நாளான அன்று நடராஜப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக போற்றப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் திரவிய பொடி, மஞ்சள் பொடி, வில்வப்பொடி, மாப்பொடி, சந்தனம், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.
சுவாமி, அம்பாளுக்கு ஷோடசோபசாரம் செய்யப்பட்டு, மங்கல ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் தேவாரம், திருவாசகம், நடராஜ பத்து உள்ளிட்ட பல்வேறு பதிகங்களைப் பாடி வழிபட்டனர். இதேபோல் காரைக்குறிச்சி சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், விசேஷ வழிபாடுகளும் நடைபெற்றன.
பக்தர்கள் தரிசனம்
உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மாள் வீதி உலா மற்றும் தீர்த்த வாரி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் யாகபூஜையும், நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. மாலையில் ஊடல் உற்சவமும், காண்டீப தீர்த்த குளக்கரையில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த நடராஜரின் ஐம்பொன் சிலை தற்போது ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆருத்ரா தரிசனத்திற்காக நேற்று முன்தினம் குருவாலப்பர் கோவிலில் இருந்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு நடராஜரின் ஐம்பொன் சிலை பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அந்த சிலை அலங்கரிக்கப்பட்டு, கோவிலில் நேற்று தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் அந்த சிலை குருவாலப்பர் கோவிலுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story