மேடையில் யார் அமர்வது? என மாவட்ட செயலாளர் முன்பு மோதிக்கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்
மேடையில் யார் அமர்வது? என மாவட்ட செயலாளர் முன்பு மோதிக்கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் காயம் அடைந்தனர்.
சென்னை திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மதியம் அ.தி.மு.க. வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார்.
இதில் வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும், மேடையில் யார் அமர்வது? என்பது தொடர்பாக பகுதி செயலாளர்களான சந்திரசேகர் தரப்புக்கும், கொளத்தூர் கணேசன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு முன்பே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இந்த மோதலில் காயம் அடைந்த வட்ட செயலாளர் டில்லிபாபுக்கு ரத்தம் கொட்டியது. நிர்வாகிகள் சந்துரு, அர்னால்டு, சந்திரசேகர் ஆகியோரும் லேசான காயம் அடைந்தனர். 4 பேரும் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர்கள் பாண்டியராஜன், அப்துல்ரஹீம், முன்னாள் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் உள்ளிட்டோர் ரகளையில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை சமாதானம் செய்துவைத்தனர். பின்னர் இருதரப்பினர் ஒருவர் மீது ஒருவர் தனித்தனியாக திரு.வி.க.நகர் போலீசில் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story