‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாநகராட்சியின் மகத்தான நடவடிக்கை
சென்னை முகப்பேர் (மேற்கு) 7-வது பிளாக் ஜியோன் தெருவில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதும், அங்கு ஆபத்தான வகையில் இரும்புத்தகடுகள் சரிந்து கிடப்பதும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றியதுடன், இரும்பு தகடுகளையும் சீரமைத்து கட்டி வைத்துள்ளனர். இந்த நடவடிக்கைக்காக மாநகராட்சிக்கும், தினத்தந்தி பத்திரிகைக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பழுதான மின்விளக்குகள்
சென்னை மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது மின்விளக்குகள் பழுதானது. ஆனால் இதுவரையில் இந்த பழுதை சரி செய்யாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு 7 மணிக்கு மேல் இந்த சாலையில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
-பா.தினேஷ், மாதவரம்.
கல்லூரி மாணவியின் வேண்டுகோள்
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் வசித்து வருகிறேன். அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறேன். மதியம் 1.30 மணியளவில் கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்கு மதியம் 3 மணி ஆகி விடுகிறது. காரணம், திரு.வி.க. நகர் பஸ்நிலையம் செல்லும் மாநகர பஸ் (வழித்தட எண்- 46) இல்லாதது தான். எனவே கல்லூரி முடியும் நேரத்தில் இந்த பஸ்சை விட்டால் கொளத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து வரும் மாணவிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
- மாணவி லட்சுமி பிரிதா.
மின்வயரை சூழ்ந்துள்ள செடி-கொடிகள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பையம்பாடி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தை சுற்றிலும், வயர்கள் மீது செடி-கொடிகள் படர்ந்துள்ளன. இதனால் அடிக்கடி மின்தடை பிரச்சினை ஏற்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்சார வயர்களை சூழ்ந்துள்ள செடி-கொடிகளை அகற்றிட வேண்டும்.
-வி.கண்ணன், பையம்பாடி கிராமம்.
பொது கழிப்பறைகளின் அவலம்
சென்னையில் பல பொது கழிப்பறைகள் பயன்பாடின்றியும், அலங்கோலமாகவும் காட்சியளிக்கிறது. இலவச கழிப்பறைகளில் சிலர் சட்டவிரோதமாக கட்டணமும் வசூலிக்கிறார்கள். எனவே இந்த போக்கை தடுக்கும் வகையில் பொது கழிப்பறைகளை சீரமைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி உடனடியாக ஈடுபட வேண்டும். இல்லையென்றால் கழிப்பறை பராமரிப்பு பணியை தனியார் நிறுவனங்களுக்கு ‘டெண்டர்’ விடலாம். இதன் மூலம் மாநகராட்சிக்கும் வருமானம் பெருகும். சில கழிப்பறைகள் நுழைய முடியாத அளவுக்கு படுமோசமாக இருக்கிறது. நடவடிக்கை எடுக்கப்படுமா?
- சமூக ஆர்வலர்கள்.
சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஓம் சக்தி நகரில் ராஜாஜி தெரு, நேதாஜி தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய தெருக்களில் பல இடங்களில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு 2 மாத காலமாக குடிநீர் வீணாக வழிந்து சாலையில் ஓடுகின்றது. இதனால் சாலையும் சேதமடைகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை இதை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது வரை குடிநீர் வீணாக சென்று வருகிறது.
- ஈ.ஆறுமுகம், கள்ளிக்குப்பம்.
ஆபத்தான மின் இணைப்பு
சென்னை ஓட்டேரி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் பகுதியில் மின்சார இணைப்பு பெட்டியில் இருந்து ஆபத்தான முறையில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குக்ஸ் சாலையில் உள்ள மின்சார உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்தாலும் கண்டுகொள்வதில்லை. அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் முன்பு மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.பி.பரந்தாமன், மேட்டுப்பாளையம்.
தரமற்ற பொருளும், அலட்சிய பதிலும்...
சென்னை தியாகராயநகர் தர்மபுரம் மெயின்ரோட்டில் உள்ள டி.யு.சி.எஸ். பொது வினியோக அங்காடியில் விற்கப்படும் பொருட்கள் தரமற்றதாகவே இருக்கிறது. இதுகுறித்து கேட்டால் ‘இதுதான் இருக்கிறது. வேண்டும் என்றால் வாங்கி கொள்ளுங்கள்’, என்று அங்குள்ள விற்பனையாளர்கள் அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பேசாமலேயே கிடைக்கும் பொருட்களை வாங்கி செல்லவேண்டியது உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ஏ.நாகராஜன், தியாகராயநகர்.
கழிவுநீரால் அவதி
சென்னை குரோம்பேட்டை 19-வது வார்டு கங்கையம்மன் நகர் அஸ்தினாபுரம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு பிரச்சினையால் மிகுந்த இன்னல்களை அனுபவித்து வருகிறோம். கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. நோய்கள் பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- பொதுமக்கள்.
மரத்தின் கீழே செல்லும் மின் வயர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கர்லாம்பாக்கம் காலனியில் 100 ஆண்டு பழமையான மரம் உள்ளது. இந்த மரத்துக்கு கீழே மின் வயர்கள் செல்கின்றன. இதனால் அடிக்கடி தீப்பொறி வெடித்து சிதறுகிறது. அசம்பாவிதம் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பலமுறை இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
- சோமசுந்தரம், பள்ளிப்பட்டு.
Related Tags :
Next Story