பனங்கிழங்கு 1 கட்டு ரூ.70-க்கு விற்பனை
தேனியில் பனங்கிழங்கு விற்பனை தொடங்கி உள்ளது. ஒரு கட்டு ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
தேனி:
பனங்கிழங்கு
கற்பகத்தரு என்று அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தருகிறது. அதில் பனங்கிழங்கும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பனை உணவாக திகழ்கிறது. பனை விதைகளை நெருக்கமாக மண்ணில் புதைத்து வைத்து பனங்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு மண்ணில் புதைத்து சாகுபடி செய்யப்படும் விதைகள் முளைத்து 90-ல் இருந்து 110 நாட்களில் கிழங்காக விளைந்து விடும்.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பேரையூர் போன்ற பகுதிகளிலும் பனங்கிழங்கு சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. அங்கு சாகுபடி செய்யப்படும் கிழங்குகள் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வகையில், பேரையூர், உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து தேனிக்கு கொண்டு வந்து பனங்கிழங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கட்டு ரூ.70
தேனி உழவர் சந்தை, பெரியகுளம் சாலை, எடமால் தெரு, பகவதியம்மன் கோவில் தெரு, குன்னூர் சோதனைச்சாடி உள்பட பல்வேறு இடங்களிலும் பனங்கிழங்கு விற்பனை நடந்து வருகிறது. வெளியூர்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த கிழங்குகளை கொண்டு வந்து சாலையோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் பனங்கிழங்கு விளைச்சல் அடைந்த பிறகு அதோடு இணைந்த விதையை உடைத்தால் அதற்குள் கெட்டியான கேக் போன்ற உணவுப் பொருள் இருக்கும். அது தவுன் என்று அழைக்கப்படுகிறது. இந்த தவுன் விற்பனையும் தேனி எடமால் தெருவில் தொடங்கி உள்ளது. இதையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர்.
Related Tags :
Next Story