2,700 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலக்கு


2,700 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலக்கு
x
தினத்தந்தி 21 Dec 2021 6:29 PM IST (Updated: 21 Dec 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 2,700 ரேஷன் கார்டுதாரர்களுக்கு கை விரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.

தேனி: 


கைவிரல் ரேகை
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் கருவியில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்படுவதால் இந்த நடைமுறை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இருப்பினும் ரேஷன் கடைகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், முதியோர்களுக்கு கை விரல் ரேகை பதிவு சரியாக ஆகாததாலும் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. முதியோர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். 

கைவிரல் ரேகை பதிவு சரியாக விழாமல் மீண்டும், மீண்டும் ரேஷன் கடைகளுக்கு மக்கள் அலைந்து திரும்பும் நிலைமை ஏற்பட்டது. இதை தவிர்க்கவும், முதியோர்கள் கைரேகை வைப்பதில் இருந்து விலக்கு பெறுவதோடு, கடைக்கு வர முடியாதவர்கள் வேறு நபர்கள் மூலம் பொருட்கள் வாங்கிக் கொள்ள வழிவகை ஏற்படும் வகையில் அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது.

2,700 பேர்
அதன்படி, கை விரல் ரேகை பதிவு சரியாக செய்ய முடியாதவர்கள் மற்றும் ரேஷன் கடைக்கு வர முடியாத முதியோர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் உரிய படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் கை விரல் ரேகை வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இந்த விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.

மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 25 ஆயிரத்து 300 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 700 ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள் இதுவரை கை விரல் ரேகை பதிவில் இருந்து விலக்கு கேட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கை விரல் ரேகை வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் மேலும் முதியோர்கள் இதுபோன்ற கை விரல் ரேகை வைப்பதில் சிரமம் இருந்தால் அவர்களும் உரிய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை தேனி மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயினி தெரிவித்தார்.


Next Story