குன்னூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும்
குன்னூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும்
ஊட்டி
எதிரே வரும் வாகனங்களை கண்டறிய கொண்டை ஊசி வளைவில் சென்சார் கருவிகள் அமைக்கப்படுவதுடன், குன்னூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- நீலகிரியில் மாநில நெடுஞ்சாலை சாலை 1,039 கிலோ மீட்டர், தேசிய நெடுஞ்சாலை 108 கிலோ மீட்டர் தூரம் பராமரிக்கப்படுகிறது.
50 இடங்கள் கண்டுபிடிப்பு
கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 557 விபத்துகளில் 84 பேர் உயிரிழந்தனர். 344 பேர் காயமடைந்தனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 3 நாட்களில் 30 மாவட்டங்களில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று ரூ.26 லட்சத்து 15 ஆயிரத்து 500 செலவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் 20 இடங்கள், மாநில நெடுஞ்சாலை யில் 21 இடங்கள், நகராட்சியில் 9 இடங்கள் என மொத்தம் 50 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டது. நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.138 கோடி, சாலை பாதுகாப்புக்கு ரூ.16.24 கோடியில் பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
புறவழிச்சாலை திட்டம்
குன்னூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை 20.5 கி.மீ. தூரம் அமைக்கப்படுகிறது. காட்டேரி, கைகாட்டி, லவ்டேல் வழியாக ரூ.46.43 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
நீலகிரியில் கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை 2-வது கொண்டை ஊசி வளைவில் நவீன சென்சார் கருவி சோதனை முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்சார் கருவிகள்
இதன் மூலம் எதிரே வரும் வாகனங்கள் குறித்து தமிழ், ஆங்கிலம் மொழியில் ஒலி எழுப்பி டிரைவர்களுக்கு தெரிவிக்கிறது. இதனால் டிரைவர்கள் உஷார் அடைந்து முன்கூட்டியே வாகனங்களை நிறுத்தி செல்ல முடியும். இதன் பயன்பாடு ஆய்வு செய்த பின்னர் நீலகிரியில் பிற கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
நீலகிரியில் சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயார் செய்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
ஓட்டுநர் உரிமம்
2020-ம் ஆண்டு சாலை விபத்தில் 8,060 பேர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கவனக்குறைவால் விபத்தில் சிக்கி இறந்தனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் முறையான பயிற்சி அளித்த பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் விபத்து இல்லாத மாவட்டம் அல்லது விபத்துகள் குறைந்த மாவட்டத்திற்கு முதல் பரிசாக ரூ.25 லட்சம், 2-ம் பரிசாக ரூ.15 லட்சம், 3-வது பரிசாக ரூ.10 லட்சம் வழங்கி பாராட்டுகளை தெரிவிக்கிறார். நீலகிரி மாவட்டம் முதல் பரிசு பெற வேண்டும். இதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் பாலமுருகன், கண்காணிப்பு பொறியாளர் (கட்டடம், பராமரிப்பு) கண்ணன், கோட்ட பொறியாளர்கள் குழந்தைவேல், செல்வன், ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பாலம் அமைப்பது குறித்து ஆய்வு
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு சேரிங்கிராஸ் பகுதியில் வரைபடத்தை பார்வையிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஊட்டி எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.461.19 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story