சரக்கு வாகனம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது


சரக்கு வாகனம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 21 Dec 2021 8:37 PM IST (Updated: 21 Dec 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

ஊட்டி

மஞ்சூர் அருகே சரக்கு வாகனம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 7 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சரக்கு வாகனம்

மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 43). இவர் சரக்கு வாகனம் மூலம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் வாகனத்தில் சென்று காய்கறிகளை விற்பனை செய்தார். பின்னர் இரவில் மஞ்சூரில் இருந்து எமரால்டு சென்று கொண்டு இருந்தார். 

வாகனத்தை வேல்முருகன் ஓட்டினார். அப்போது தொட்டகம்பையில் பஸ்சுக்காக 7 பெண்கள் வெகுநேரமாக காத்திருந்தனர். அவர்களை செல்லும் வழியில் இறக்கி விடுவதாக கூறி, 7 பேரையும் வேல்முருகன் தனது சரக்கு வாகன பின்புறம் அமர வைத்து ஏற்றி சென்றார். 

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது 

தொட்டகம்பை-பிக்கட்டி சாலை இடையே சென்றபோது, கெரப்பாடு பகுதியில் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் திடீரென சாலையோரத்தில் உள்ள 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. 

இதில் அங்குள்ள தேயிலை தோட்டம் வழியாக உருண்டு பள்ளத்துக்குள் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் அலறினார்கள். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவர் களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

8 பேர் படுகாயம் 

இதில் வேல்முருகன், பாலகண்டியை சேர்ந்த மீனாட்சி (31), சசிகலா (41), நித்தியா (19), திலகவதி (40), சாந்தி (39), முத்துலட்சுமி (69), விமலா (40) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். சசிகலா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். 

மற்ற 7 பேரும் மஞ்சூரில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து மஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், சரக்கு வாகனம் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Next Story