பேரண்டூர் கிராமத்தில் 29 பேருக்கு வாந்தி, மயக்கம்; பள்ளி அறை சிறப்பு மருத்துவ வார்டாக மாற்றம்
பேரண்டூர் கிராமத்தில் 29 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து பள்ளி அறை சிறப்பு மருத்துவ வார்டாக மாற்றப்பட்டது.
வாந்தி, மயக்கம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் ஊராட்சியில் சுமார் 2,500 பேர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கிராமத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி கிராமத்தை சேர்ந்த சுமார் 90 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், லட்சிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு தேங்கிய மழைநீர் கலந்த குடிநீர் பருகுவதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. டேங்கர் லாரிகளில் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 90 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை 29 பேருக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
சிறப்பு மருத்துவ வார்டு
நேற்று 5 பேருக்கு லேசான வயிற்றுபோக்கு ஏற்பட்டது. உடனே அவர்களை கிராமத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் சுகாதாரத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். வயிற்றுப்போக்கை முழுவதுமாக கட்டுப்படுத்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் உள்ள ஒரு அறை சிறப்பு மருத்துவ வார்டாக மாற்றப்பட்டது. இதில் 2 டாக்டர்கள் செவிலியர்கள் உள்பட 40 பேர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story