கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ7 லட்சம் நகைகள் திருட்டு
குடியாத்தத்தில் பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ7 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ7 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
கல்லூரி பேராசிரியர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42). குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சுகந்தி. வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இன்று காலையில் வழக்கம்போல் ஸ்ரீதர், அவரது மனைவி சுகந்தி ஆகியோர் வீட்டை பூட்டிக்கொண்டு கல்லூரிக்கு சென்று விட்டனர்.
அவரது மகள் பள்ளிக்குச் சென்று விட்டார். மதிய உணவுக்காக ஸ்ரீதர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டும், உள் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.
24 பவுன் நகை திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் ஹாலில் இருந்த மேஜை டிராயரில் இருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து அதில் இருந்த 24 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், 4 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் ஸ்ரீதரின் மனைவி சுகந்தி விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 24 பவுன் நகைகள் மட்டும் திருட்டுபோய் இருந்தன.
மற்றொரு இடத்தில் பையில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் மர்ம நபர்களின் கண்ணில் படாமல் தப்பியது தெரியவந்தது.
இந்த திருட்டு குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டுகள் மோசஸ், சந்திரபாபு உள்ளிட்டோர் விரைந்து வந்து திருட்டு நடைபெற்ற வீட்டில் விசாரணை நடத்தினர்.
மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடைபெற்ற வீட்டில் ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருட்டுப்போன நகைகளின் மதிப்பு சுமார் 7 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story