மோகனூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மோகனூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மோகனூர், டிச.22-
மோகனூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானங்களில் கையெழுத்திடாமல் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்றியக்குழு கூட்டம்
மோகனூர் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி தலைமையில் மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பயணியர் விடுதியில் நடந்தது. கூட்டம் தொடங்கிய போது ஒன்றியக்குழு தலைவர் சரசுவதியும், வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பனும் திடீரென கூட்டத்தை விட்டு வெளியேறினர். அதன்பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு கூட்டம் தொடங்கியது. கே.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் சரசுவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் முனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தீர்மானம்
கூட்டத்தில் நடப்பாண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய செலவு கணக்கிற்கும், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி செஙகப்பள்ளி ஊராட்சியில் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.63 ஆயிரத்து 500 ஒதுக்கப்பட்டது.
ஒன்றிய பகுதிகளில் உள்ள சேதமடைந்த 6 பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 25 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 சுகாதார பணிகள் உள்பட 41 திட்டப்பணிகளுக்கு ரூ 56 லட்சத்து 72 ஆயிரத்து 806 நிதி ஒதுக்கப்பட்டு மன்ற அங்கீகாரத்திற்கு தீர்மானம் வைக்கப்பட்டது.
வெளிநடப்பு
ஆனால் தீர்மானங்களில் கையெழுத்திடாமல் 5 அ.தி.மு.க. கவுன்சிலர்களும், 5 தி.மு.க. கவுன்சிலர்களும், பா.ம.க. துணைத்தலைவர் ஆகிய 11 பேரும் கூட்டத்தில் இருந்து திடீரென வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி, தி.மு.க. உறுப்பினர் மகேசுவரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லப்பன், காந்திமதி ஆகிய 4 பேரும் மட்டும் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.
தி.மு.க.வில் சேர்ந்தவர்
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் முன்னிலையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றியக்குழு தலைவர் சரசுவதி அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் தான் தி.மு.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story