மதுபாட்டில்கள் வினியோகம் செய்ய போலி ஒப்பந்த பத்திரம் தயாரிப்பு


மதுபாட்டில்கள் வினியோகம் செய்ய போலி ஒப்பந்த பத்திரம் தயாரிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2021 9:50 PM IST (Updated: 21 Dec 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்கள் வினியோகம் செய்ய போலி ஒப்பந்த பத்திரம் தயாரிப்பு

நாமக்கல், டிச.22-
டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் வினியோகம் செய்ய போலி ஒப்பந்த பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
திருச்செங்கோடு அருகே கூத்தகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜெகதீஷ்குமார், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு டாஸ்மாக் மொத்த விற்பனை கிடங்கில் இருந்து, எங்களுக்கு சொந்தமான டிரான்ஸ்போர்ட் நிறுவன லாரிகள் மூலம் மதுபாட்டில்கள் வினியோகம் செய்து வந்தோம்.
இதற்காக டாஸ்மாக் நிறுவனத்தில் எனது தந்தை கணேசன் பெயரில் தான் போக்குவரத்து ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான மாதங்களுக்கான வாடகை சுமார் ரூ.40 லட்சம் நாங்கள் இன்னமும் டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து பெறவில்லை.
போலி ஒப்பந்த பத்திரம்
இதற்கிடையே திருச்செங்கோட்டை சேர்ந்த சிலர் போலி ஆவணம் தயாரித்து எனது தந்தை கணேசனை போன்று கையெழுத்திட்டு கூட்டு ஒப்பந்தபத்திரம் தயாரித்து பங்குதாரர்கள் என டாஸ்மாக் அலுவலகத்தில் கொடுத்து ஏமாற்றி உள்ளனர். எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன் விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி ஒப்பந்த பத்திரத்தை கடலூரில் சென்று வாங்கி இருப்பதும், டாஸ்மாக் அலுவலர்கள் சிலரின் துணையுடன் இந்த பத்திரத்தை அலுவலக கோப்பில் வைத்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து போலி ஒப்பந்த பத்திரம் டாஸ்மாக் அலுவலக கோப்புக்கு எப்படி சென்றது ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story