சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்கள்


சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்கள்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:03 PM IST (Updated: 21 Dec 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தேனி: 

கூடலூர் லோயர்கேம்ப் அருகே பளியன்குடி உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வேளாண்மை துறை சார்பில் ஆடு வளர்க்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு  வழங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு பளியன்குடி பகுதிக்கு ஆடுகள் கொண்டு வரப்பட்டது. அரசு அதிகாரிகள் முன்னிலையில் பயனாளிகளுக்கு ஆடுகள் நேற்று வழங்கப்பட இருந்தது. 

இந்த நிலையில் வனத்துறை அனுமதியின்றி பளியன்குடி வனப்பகுதிக்குள் ஆட்டு குட்டிகளை கொண்டு வரக்கூடாது என்று திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினரை கண்டித்து திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த லோயர்கேம்ப் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாவண்யா, வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு, உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுணன் ஆகியோர் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு வழங்கக்கூடிய சலுகைகளுக்கு வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபடுவதை கைவிட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story