கடன் வழங்க தகுதி உள்ளதா, இல்லையா என்பதை விரைந்து தெரிவிக்க வேண்டும். வங்கிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அரசு மூலம் கடன் வழங்கபரிந்துரை செய்யும்போது, கடன் வழங்க தகுதி உள்ளதா, இல்லையா என்பதை விரைந்து தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் ேகட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை
அரசு மூலம் கடன் வழங்கபரிந்துரை செய்யும்போது, கடன் வழங்க தகுதி உள்ளதா, இல்லையா என்பதை விரைந்து தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் ேகட்டுக்கொண்டார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் வங்கியாளர்கள் கடன் உதவிகளை வழங்கிட வேண்டும்.
கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியுள்ள நபர்களுக்கு காலம் தாழ்த்தாமல் கடன் உதவிகளை வழங்க வேண்டும்.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தொழில் தொடங்குபவர்கள் மற்றும் கடனுதவி பெற்று தொழிலை விரிவு படுத்துபவர்களுக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கியாளர்கள் மூலம் முறையாக கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைந்து தெரிவிக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி வழங்கிட அரசு மூலம் பரிந்துரை செய்யும் போது, அவர்களுக்கு கடன் உதவி வழங்குவதையும், இல்லை என்பதையும் விரைவாக ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும். ஒரு வருடம் வரை காத்திருந்து பின்னர் அவர்களுக்கு கடன் வழங்குவது சாத்தியமில்லை என தெரிவிப்பது வருத்தமான செய்தி. இதனை தவிர்க்கும் பொருட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஓரிரு மாதத்திற்குள் தகுதி உள்ளது, தகுதி இல்லாதது என வங்கிகள் தெரிவித்தால் அவர்கள் மாற்று வழியை தேர்வு செய்வார்கள்.
தெருவோர வியாபாரிகளுக்கு அதிகப்படியான கடன் உதவிகளை வங்கிகள் மூலம் பெற்று வழங்கிட அனைத்து ஊரக நகர்ப்பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் நானில தாசன், முன்னோடி வங்கி மேலாளர் ஜோலி பிலிப் மற்றும் அரசு துறை அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story