‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Dec 2021 10:17 PM IST (Updated: 21 Dec 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார்பெட்டி செய்தி எதிரொலி:
ஊர் பெயர் பலகை திருத்தம்

மயிலாடுதுறை மாவட்டம் இளையாளூர் அறங்கக்குடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஊர் பெயர் பலகை வைக்கும் பணியும் நடந்தது. அப்போது, ஊர் பெயர் பலகையில் அறங்கக்குடி என்பதற்கு பதிலாக வடகரை என தவறாக எழுதப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து ஊர் பெயர் பலகையில் அறங்கக்குடி என மாற்றப்பட்டது. செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
-பொதுமக்கள், அறங்கக்குடி.

சுடுகாடு கட்டிடம் சீரமைக்கப்படுமா? 

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் பில்படுகை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவில்சுடுகாடு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்பகுதி முழுவதும் சேதமடைந்து உள்ளது. குறிப்பாக மேற்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேற்பகுதி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பில்படுகை கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சுடுகாடு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-கார்த்திக்கேயன், கொள்ளிடம்.

சுகாதார சீர்கேடு

திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் பகுதி ஐநூற்று பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, சாலையோரம் குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு சாலையை சீரமைக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஹரினி ரேவதி, திருவாரூர்.

சாலை அமைக்க வேண்டும்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செட்டிபுலம் அருகே நடுக்காடு கிராமம் உள்ளது. இந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடத்தில் சாலை வசதி இல்லை. இதனால் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்பாதையும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், சாலை வசதி செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், நாகை.

சாலையை சீரமைக்க வேண்டும்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தருசுவேலி கிராமம் உள்ளது. இங்கு உள்ள தார்ச்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தார்ச்சாலை மண் சாலை போல உள்ளதால், வாகன ஓட்டிகள் தினசரி சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். 
-பாரதி, தருசுவேலி.

Next Story