“மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு”
பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற விழாவில், மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு என்று சிவல்புரி சிங்காரம் கூறினார்.
காரைக்குடி
பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற விழாவில், மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு என்று சிவல்புரி சிங்காரம் கூறினார்.
முதல் சந்திப்பு நிகழ்ச்சி
தமிழகம் முழுவதும் உள்ள மெல்லிசை ராஜ்ஜிய குழுவை சார்ந்த 175 குடும்பத்தினர்களின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கற்பக விநாயகர் கோவில் முன்னாள் அறங்காவலர் ஆர்.எம். நாராயணன் தலைமை தாங்கினார். காரைக்குடி எஸ்.எம். முருகப்பன் வரவேற்றார். டி.ராமசாமி, முத்துக்கருப்பன், சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை வள்ளி பழனியப்பன், மீனாள் மெய்யப்பன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முன்னதாக தையல்நாயகி, அலமு சீனிவாஸ் ஆகியோர் பக்தி பாடல்களை பாடினர்.
அதன்பிறகு ஆர்.எம். நாராயணன் ஆன்மிக சேவையை பாராட்டி திருப்பணி செல்வர் என்ற பட்டத்தை கிரிவலக்குழு தலைவர் சிவல்புரி சிங்காரம் வழங்கி பாராட்டி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை கமலாஸ் சினிமா அதிபர் வள்ளியப்பன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, பேராசிரியர் பிச்சைக்குருக்கள், கோட்டையூர் வள்ளிக்கண்ணு நாகராஜன், தேவகோட்டை பாக்கியலட்சுமி, நாட்டசரன் கோட்டை ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். காரைக்குடி முருகப்பன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். இவ்விழாவில் சிவல்புரி சிங்காரம் பேசும்போது கூறியதாவது:-
தாலாட்டில் வாழ்க்கை தொடக்கம்
இசையோடு கலந்தது தான் நமது வாழ்க்கை, பிறப்பிலிருந்து அந்திய காலம்வரை இசை நம்மோடு சம்பந்தப்படுகிறது. பிறந்ததும் தாலாட்டுப் பாடப்படுகின்றது. பிறகு பாராட்டு கவிதை, கடைசியில் நீராட்டு விழாவிலும் பாடல் இடம் பெறுகின்றது. திருமணம் மங்கல இசையில் தொடங்குகிறது. உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்க இசைப்பாடல் தேவைப்படுகின்றது. எனவே நாட்டுப்புறப்பாடல்கள் பிரபலமாகிக் கொண்டே வருகின்றது. "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" என்று கவிஞர் கண்ணதாசன் சொல்வார்.
கர்ப்பமடைந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் அசையாத பிள்ளை கூட சமீபத்தில் திருவாசகம் கேட்டு அசைந்ததாக அமெரிக்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் பெற்றது இசை. இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து சங்குமீனாள் ஸ்ரீநிதியின் நடன நிகழ்ச்சி, காரைக்குடி கிருத்திகா குழுவினரின் நாடகம், அங்குராஜ் தலைமையில் வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது. பிள்ளையார்பட்டி கோவில் அறங்காவலர்கள் ஆத்தங்குடி சுப்பிரமணியன், கண்டனூர் கருப்பஞ்செட்டி ஆகியோர் முன்னிலையில் மெல்லிசை ராஜ்ஜிய குழு குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் பானை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story