ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி


ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 22 Dec 2021 12:05 AM IST (Updated: 22 Dec 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1 கோடியே 89 லட்சம் நிதியில் நடைபெற்று வரும் ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியை தோண்டி ஆழப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பனைக்குளம்
ரூ.1 கோடியே 89 லட்சம் நிதியில் நடைபெற்று வரும் ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியை தோண்டி ஆழப்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடலை தோண்டி....
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ளது ஆற்றங்கரை கடற்கரை கிராமம். இந்த பகுதியில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகளை ஆற்றங்கரை கடற்கரை முகத்துவார கடல் வழியாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது இந்த பகுதியை மணல் மூடி விடுவதால் அடிக்கடி படகுகள் மணலில் சிக்கி அவதி அடைந்து வந்தனர். இதனால் ஆற்றங்கரை முகத்துவார கடல்பகுதியை தோண்டி ஆழப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியை தோண்டி ஆழப்படுத்த, அரசு ரூ.1 கோடியே 89 லட்சம் நிதியை கடந்த ஆண்டு ஒதுக்கியது. அதைத்தொடர்ந்து ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியை தோண்டி ஆழப்படுத்தும் பணியானது கடந்த 3 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது.
கடலை தோண்டி ஆழப்படுத்தும் டிரெஸ்சிங் கப்பல் மூலம் மணலை தோண்டி கடலை ஆழப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. மேலும் இவ்வாறு கடலில் இருந்து கப்பல் மூலம் தோண்டி எடுக்கப்படும் மணலானது பெரிய குழாய்கள் மூலம் கடற்கரையோரம் கொட்டப்படுகின்றன.
தடுப்புச்சுவர்கள்
இதுபற்றி மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியை தோண்டி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த பணி முழுமையாக முடிக்கப்படலாம். இதில் ஆற்றங்கரை முகத்துவாரம் கடல் பகுதியில் 600 மீட்டர் நீளத்தில் இரண்டரை மீட்டர் ஆழத்தில் கப்பல் மூலம் தோண்டி மணலானது கடலில் இருந்து கொண்டு வரப்பட்டு கடற்கரை பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதுதவிர இந்த கடல் பகுதியானது மணலால் மூடி விடாமல் இருப்பதற்காக கடற்கரை பகுதியில் பெரிய பாறாங்கற்களை கொண்டு தடுப்பு சுவர்களும் ஒரு பகுதியில் கட்டப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியில் தடுப்பு சுவர்கள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளதோடு கடலைத் தோண்டி ஆழப்படுத்துவதால் படகுகள் இந்த முகத்துவார கடல் வழியாக எளிதில் மீன்பிடிக்க சென்று வரலாம். மணலில் படகுகள் சிக்குவது இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story