சின்னகுளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
சிவகாசி சின்னகுளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
சிவகாசி,
சிவகாசி சின்னகுளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார்கள் ராஜ்குமார் (சிவகாசி), மாதா (வத்திராயிருப்பு), ராமசுப்பிரமணியம் (ஸ்ரீவில்லிபுத்தூர்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கரநாராயணன், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதே போல் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாக்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உர தட்டுப்பாடு
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறிய கோரிக்கைகள் வருமாறு:-
ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் பகுதியில் தொடர்ந்து கனிம திருட்டு நடக்கிறது. இதை தடுக்க வேண்டும். கன்னிச்சேரி, முதலிப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமச்சந்திராபுரம், அச்சம்தவிர்த்தான், ராமலிங்காபுரம் ஆகிய பகுதியில் உர தட்டுப்பாடு இருக்கிறது. பானாகுளம் கண்மாயில் நீர்தடுப்பு பலகையை உயர்த்தி வைக்கப்பட்டதால் கண் மாய் நிரப்பியும் மறுகால் பாயவில்லை.
இதனால் திரணாகுளம் கண்மாய்க்கு நீர்வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பானாகுளம் கண் மாயில் கூடுதலாக வைக்கப்பட்டு தடுப்புகளை அகற்ற வேண்டும்.
மீன் பாசி ஏலம்
தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறையில் குழு வைத்துள்ளவர்களுக்கு தான் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் தனிநபர் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். சிவகாசி சின்னகுளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
வாழைக்குளம் கண்மாயில் மீன் பாசி ஏலம் ஆண்டு தோறும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஆணைக்குட்டம் அணையின் மதகுகளை பழுது பார்க்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.
விதைகள்
நிகழ்ச்சியில் சிவகாசி வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறி விதைகள் மற்றும் ஊட்டம் தரும் காய்கறி தொகுப்புகளை விருதுநகர் தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், சிவகாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துலட்சுமி ஆகியோர் 4 பயனாளிகளுக்கு வழங்கினர்.
Related Tags :
Next Story