மதுரையில் 80 டன் ரேஷன் அரிசி சிக்கியது; 9 பேர் கைது
மதுரையில் நடத்திய அதிரடி சோதனையில் குடோனில் 80 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரையில் நடத்திய அதிரடி சோதனையில் குடோனில் 80 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
80 டன் ரேஷன் அரிசி
மதுரை கருப்பாயூரணி கல்மேடு பகுதியில் உள்ள அரிசி ஆலை குடோனில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் தனிப்படை போலீசாரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த குடோன் முன்பு 7 லாரிகளில் 40 டன் ரேஷன் அரிசி மூடைகளும், குடோனில் 40 டன் ரேஷன் அரிசி மூடைகளும் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த குடோன் உரிமையாளர் மணிகண்டன் (வயது 42), சோனைமுத்து (38) மற்றும் 7 லாரிகளின் டிரைவர்கள் என அனைவரையும் பிடித்து விசாரித்தனர்.
9 பேர் கைது- லாரிகள் பறிமுதல்
அதில் அந்த லாரிகள் அனைத்தும் ஸ்ரீநாத் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அந்த லாரிகள் மதுரையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மூடைகளை கொண்டு செல்வதும் தெரியவந்தது. மேலும் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் அரிசி மூடைகள் அனைத்தும் குடோனுக்கு எப்படி வந்தது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் யார்- யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், சோனைமுத்து மற்றும் 7 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். மேலும் ஸ்ரீநாத்தை தேடி வருகிறார்கள்.
கடும் நடவடிக்கை
அங்கிருந்த 80 டன் அரிசி மூடைகள் மற்றும் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுரை மாவட்டத்தில் பொது மக்களுக்கு வினியோகிக்க கூடிய ரேஷன் அரிசியை யாரேனும் பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story